"ஈரான் இன்னும் பெரிய விலையைக் கொடுக்க வேண்டும்!" டிரம்பின் அடுத்த மூவ்வால் மேற்கு ஆசியாவில் மீண்டும் பதற்றம்
செய்தி முன்னோட்டம்
மேற்கு ஆசியாவில் அமைதியை நிலைநாட்ட ஈரான் அனுப்பிய 14 அம்சத் திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆய்வு செய்து வரும் அதே வேளையில், அந்நாட்டின் மீது மீண்டும் ஒரு ராணுவத் தாக்குதல் நடத்தப்படும் என்ற பகீர் எச்சரிக்கையையும் அவர் விடுத்துள்ளார். ஈரானின் அணுஆயுதக் கனவை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்பதில் உறுதியாக இருக்கும் டிரம்ப், அந்நாடு மீண்டும் ஏதேனும் தவறு செய்தால் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
சாத்தியக்கூறுகள்
டிரம்பின் எச்சரிக்கையும் தாக்குதல் சாத்தியக்கூறுகளும்
ஈரான் தனது நடவடிக்கைகளில் எல்லை மீறினால், மீண்டும் ராணுவத் தாக்குதலை அமெரிக்கா முன்னெடுக்கும் என்று டிரம்ப் தெரிவித்தார். "அவர்கள் தவறாக நடந்துகொண்டால் அல்லது கெட்ட காரியங்களைச் செய்தால், தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் நிச்சயமாக உள்ளன" என்று அவர் குறிப்பிட்டார். ஈரானின் எஞ்சியிருக்கும் ஏவுகணை உற்பத்தித் திறனை முழுமையாக ஒழிப்பதே அமெரிக்காவின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார். கடந்த பிப்ரவரி 28 அன்று இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா ஈரான் மீது வான்வழித் தாக்குதலை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
டிரம்ப் கிண்டல்
தலைமைத்துவச் சிக்கலில் ஈரான் இருப்பதாக டிரம்ப் கிண்டல்
ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் ஒரு பக்கம் நடந்தாலும், அந்நாட்டின் தலைமைத்துவத்தில் நிலவும் குழப்பத்தை டிரம்ப் கிண்டல் செய்துள்ளார். "ஈரான் ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புகிறது, ஆனால் அவர்கள் தற்போது சிதைந்து போயுள்ளனர். அவர்களின் தலைவர் மறைந்துவிட்டதால், தற்போதைய தலைவர் யார் என்பதைக் கண்டறிவதில் அவர்களுக்குப் பெரும் சிரமம் உள்ளது" என்று டிரம்ப் கூறினார். ஈரானின் தற்போதைய பலவீனமான நிலை, ஒப்பந்தங்களுக்கு அவர்களைப் பணிய வைக்கும் என்று அமெரிக்கா கருதுகிறது.
கூடுதல் நிபந்தனைகள்
இன்னும் போதுமான விலையைக் கொடுக்கவில்லை
ஈரான் அனுப்பிய புதிய அமைதித் திட்டம் குறித்து தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், அந்தத் திட்டத்தை ஏற்க வாய்ப்பில்லை என்று சூசகமாகத் தெரிவித்தார். "கடந்த 47 ஆண்டுகளில் மனிதகுலத்திற்கும் உலகிற்கும் செய்த தீமைகளுக்கு ஈரான் இன்னும் போதுமான விலையைக் கொடுக்கவில்லை" என்று அவர் பதிவிட்டுள்ளார். ஈரானின் கடந்த காலச் செயல்பாடுகள் மன்னிக்க முடியாதவை என்பதால், கூடுதல் நிபந்தனைகளை விதிக்க ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.
அணு ஆயுதம்
அணு ஆயுதத் தடை மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி
ஈரான் அணு ஆயுதம் பெறுவதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது என்பதில் ட்ரம்ப் உறுதியாக இருக்கிறார். ஈரான் அணு ஆயுதம் பெற்றால் அது இஸ்ரேல், மேற்கு ஆசிய நாடுகள் மற்றும் ஐரோப்பாவிற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறும் என்று அவர் எச்சரித்துள்ளார். ஈரானின் 14 அம்சத் திட்டத்திற்குப் பதிலடியாக, ஈரான் தனது அணுசக்தித் திட்டத்தைக் கைவிட வேண்டும் மற்றும் உலக வர்த்தகத்தின் முக்கியப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க வேண்டும் என்ற நிபந்தனைகளை ட்ரம்ப் முன்வைத்துள்ளார்.
பதற்றம்
மேற்கு ஆசியாவில் தொடரும் பதற்றம்
பாகிஸ்தான் வழியாக ஈரான் தனது புதிய திட்டத்தை அமெரிக்காவிற்கு அனுப்பியுள்ள நிலையில், அமெரிக்காவின் 9 அம்சத் திட்டங்களுக்கு ஈரான் என்ன பதில் அளித்துள்ளது என்பது இன்னும் வெளிப்படையாகத் தெரியவில்லை. இருப்பினும், டிரம்பின் தற்போதைய கடுமையான நிலைப்பாடு, மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம் மேலும் நீடிக்கும் என்பதையே காட்டுகிறது. ஈரானின் அணுஆயுதப் போர் முழக்கம் மற்றும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளுக்கு இடையே ஒரு சுமூகமான ஒப்பந்தம் எட்டப்படுமா என்பது இன்னும் முடிவடையாத விவாதமாகவே உள்ளது.