மாமல்லபுரம் செல்ல தடை - தனியார் விடுதி உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்திய டிஎஸ்பி
இந்தியாவில் நடைபெறவுள்ள 2023ம் ஆண்டு ஜி-20 மாநாட்டின் நிகழ்வுகள் அனைத்தும் நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களின் தலைநகரம் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத்தலங்கள் கொண்ட நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் 20 நாடுகளை சேர்ந்த விருந்தினர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர். இந்நிலையில் சென்னையில் கல்வித்துறை சார்ந்த கருத்தரங்கம் இன்று(ஜன.,31) துவங்கி பிப்ரவரி 2ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் சென்னைக்கு வருகை தந்துள்ள நிலையில், நாளை 3 மணி முதல் 6 மணி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரம் சென்று புராதன சின்னங்களை பார்வையிட உள்ளனர். இதற்காக தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, கலைநிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது.
நாளை பொது மக்களுக்கு அனுமதி இல்லை
மாநாட்டிற்கு வரும் பிரதிநிதிகள் மாமல்லபுரத்திற்கு வருகை தருவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, நாளை மாமல்லபுரம் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று தொல்லியத்துறை அறிவித்துள்ளது. இதனால் அன்று ஆன்லைன் மற்றும் டிக்கெட் கவுண்டர்களின் டிக்கெட் வழங்கப்படாது. இதுகுறித்து, மாமல்லபுரம் டிஎஸ்பி ஜெகதீஸ்வரன் தலைமையில் நேற்று தனியார் விடுதி உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் வெளிநாட்டு பிரதிநிதிகள் வரும்பொழுது, விடுதிகளில் யாரும் தங்கியிருக்க கூடாது, நீண்ட நாட்களாக யாரேனும் தங்கியிருந்தால் போலீசாருக்கு தகவல் அளிக்கவேண்டும். மேலும், புது நபர்கள் நடமாட்டம் இருந்தாலும் தெரிவிக்க வேண்டும் போன்ற பல்வேறு அறிவுறுத்தல்கள் அளிக்கப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து விடுதிகள் மற்றும் பொது இடங்களில் மோப்ப நாய் மூலம் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.