தாய்லாந்து இளவரசி மஹிடோல் உடல்நிலை குறித்து அரண்மனை அறிக்கை வெளியீடு
தென் கிழக்கின் ஆசிய நாடான தாய்லாந்தின் மன்னரான மஹா வஜிரலோங்கோர்னின் முதல் மனைவிக்கு பிறந்த ஒரே மகள் தான் இளவரசி பஜ்ராகிதியாபா மஹிடோல். 44 வயதாகும் இவர் கடந்த வாரம் பாங்காக் வடக்கே உள்ள நகோன் ராட்சசிமாவில் ராணுவ நாய் பயிற்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் திடீரெனெ மயக்கம் போட்டு கீழே விழுந்தார். இதனையடுத்து பாங்காக்கிற்கு அருகில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதோடு, இதய நோய் பாதிப்பு காரணமாகவே அவர் மயக்கம் போட்டு கீழே விழுந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இளவரசியின் உடல்நிலை குறித்து அரண்மனை சார்பில் ஓர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அரசு சார்பில் மருத்துவக் குழுவிற்கு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது
அந்த அறிக்கையில், "இளவரசியின் உடல்நிலை முன்பு இருந்ததை விட தற்போது மேம்பட்டு உள்ளது. எனினும், அவரது இதயம் துடிக்கும் செயல்முறையில் ஒரு பகுதி சரியாக செயல்படவில்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து அவரது இதய துடிப்பு தொடர்ந்து கண்காணிக்கவும், அவரது நுரையீரல் மற்றும் சிறுநீரகம் ஆகியவற்றுள் உள்ள பாதிப்பினை சீராக்கவும் அரசு சார்பில் மருத்துவக் குழுவிற்கு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, அரண்மனையின் வாரிசு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் கூறப்படாத நிலையில், இளவரசியின் உடல்நிலை பாதிப்பு அரசளவில் ஏதேனும் பாதிப்பு அல்லது மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.