கோதியா கோப்பை கால்பந்து 2026: பிரேசிலை வீழ்த்தி இந்திய அணி வரலாற்று சாதனை
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் மினெர்வா அகாடமியின் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் அணி, சர்வதேச கால்பந்து அரங்கில் தங்களது ஆதிக்கத்தை மீண்டும் நிலைநிறுத்தியுள்ளது. ஸ்வீடனில் நடைபெற்ற மதிப்புமிக்க கோதியா கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில், பலம் வாய்ந்த பிரேசிலின் ஆர்எஸ் ஸ்போர்ட்ஸ் யெல்லோ அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மினெர்வா அகாடமி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக உலக இளைஞர் கால்பந்து மகுடத்தைத் தற்காத்துக் கொண்டுள்ளது.
இரட்டை மகுடம்
ஐரோப்பிய மண்ணில் மினெர்வா படைத்த இரட்டை மகுடம்
சண்டிகரைத் தளமாகக் கொண்டு இயங்கும் இந்த புகழ்பெற்ற கால்பந்து அகாடமி, இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்புதான் ஃபின்லாந்தில் நடைபெற்ற புகழ்பெற்ற ஹெல்சின்கி கோப்பையையும் முதன்முறையாகக் கைப்பற்றியிருந்தது.
கடந்த ஆண்டு ஹெல்சின்கி கோப்பை இறுதிப் போட்டியில் நூலிழப்பில் தவறவிட்ட கோப்பையை இந்த ஆண்டு வென்ற கையோடு, தற்பொழுது கோதியா கோப்பையையும் வென்று ஒரே வாரத்தில் ஐரோப்பிய இரட்டை மகுட சாதனையை மினெர்வா சிறுவர்கள் படைத்து ஒட்டுமொத்த கால்பந்து உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்.
இறுதிப்போட்டி
இறுதிப் போட்டியில் அசுர வேகத்தில் வீசப்பட்ட ஃப்ரீ-கிக்
பிரேசில் அணிக்கு எதிராக நடைபெற்ற இந்த விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், ஆரம்பம் முதலே இந்திய சிறுவர்கள் அசுர வேகத்தில் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
போட்டியின் தொடக்கத்திலேயே மினெர்வா அணியின் கிப்ஜென் தாங்சாங்லென் முதல் கோல் அடித்து இந்தியாவிற்கு முன்னிலை தேடித்தந்தார்.
அதன் பின்னர் பிரேசில் அணி ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தது.
எனினும், மினெர்வா அணியின் மெகாம்க்ராவ் நாங்ரெம் மிக அற்புதாமாக உதைத்த ஃப்ரீ-கிக் கோலாக மாற, இந்திய அணி மீண்டும் முன்னிலை பெற்று சாம்பியன் பட்டத்தை உறுதி செய்தது.
கோல் மழை
நாக்-அவுட் சுற்றில் மினெர்வா அணியின் கோல் மழை
இந்தத் தொடரின் குழு சுற்றுப் போட்டிகள் முதலே மினெர்வா அகாடமி அணி எதிரணிகளைத் திணறடித்து கோல் மழையைப் பொழிந்தது.
இங்கிலாந்தின் பிரெப் ஸ்கூல்ஸ் புளூ அணியை 12-0 என்ற கணக்கிலும், ஸ்வீடனின் சர்டே அணியை 16-0 என்ற கணக்கிலும் வீழ்த்தி மிரட்டியது.
நாக்-அவுட் சுற்றில் பிரான்சின் ஓஎஃப்சி கோரன்னஸ் அணியை 17-1 என்ற கணக்கில் துவம்சம் செய்தது.
அரையிறுதிப் போட்டியில் உக்ரைனின் எஃப்சி லோகோமோடிவ் கீவ் அணிக்கு எதிராக 3-2 என்ற கணக்கில் போராடி வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
இந்தியக் கொடி
சர்வதேச அரங்கில் உயரும் இந்தியக் கொடி
கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐரோப்பிய மண்ணில் மினெர்வா அகாடமி தொடர்ச்சியாக பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.
ஏற்கனவே நார்வே கோப்பை மற்றும் டானா கோப்பைகளை வென்றுள்ள இந்த இளம் படை, இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற புகழ்பெற்ற மத்திய தரைக்கடல் சர்வதேசக் கோப்பையில் லிவர்பூல் அணியின் 15 வயதுக்குட்பட்டோரை 6-0 என்ற கணக்கில் வீழ்த்தி உலகையே திரும்பிப் பார்க்க வைத்தனர்.
தொடர்ச்சியாக பெறப்படும் இந்த சர்வதேசக் கோப்பைகள், இந்திய இளையோர் கால்பந்து தரத்தை உலக அளவில் ஒரு புதிய உச்சத்திற்கு எடுத்துச் சென்றுள்ளன.