Loading...
"யுபிஎஸ்சி தேர்வுக்கு படிக்க ஆசையா...?" மாதம் ரூ.7,500 உதவித்தொகை வழங்கும் தமிழக அரசு! முழு விவரம் இதோ
யுபிஎஸ்சி தேர்வர்களுக்கு மாதம் ரூ.7,500 உதவித்தொகை வழங்கும் தமிழக அரசு

"யுபிஎஸ்சி தேர்வுக்கு படிக்க ஆசையா...?" மாதம் ரூ.7,500 உதவித்தொகை வழங்கும் தமிழக அரசு! முழு விவரம் இதோ

எழுதியவர் Sekar Chinnappan
Jul 19, 2026
10:48 am

செய்தி முன்னோட்டம்

மத்திய மற்றும் மாநில அரசுகள் மாணவர்களின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு கல்வி உதவித்தொகை திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில், தற்பொழுது யுபிஎஸ்சி குடிமைப் பணித் தேர்வுக்குத் தயாராகும் தமிழ்நாட்டு மாணவர்களுக்காக ஊக்கத்தொகை வழங்குவதற்கான அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், நடத்தப்படும் சிறப்பு மதிப்பீட்டுத் தேர்வு மூலம் தகுதியான 1,000 தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு மாதம் ரூ.7,500 வீதம் மொத்தம் 10 மாதங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சி மையம்

அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மைய சேர்க்கை

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும், சென்னை அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் கீழ் இயங்கி வரும் அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மையங்களில் (AICSCC) தங்கிப் படிப்பதற்கான சேர்க்கையும் இந்த மதிப்பீட்டுத் தேர்வின் அடிப்படையிலேயே நடைபெறும்.

இத்தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் தரவரிசைப் பட்டியலின் படியே இந்த இலவச பயிற்சி மையங்களுக்கான சேர்க்கை இடங்கள் நிரப்பப்படும்.

இதன் மூலம் மாணவர்கள் தங்குமிடம் மற்றும் உணவுடன் கூடிய உயர்தரமான இலவச பயிற்சியைப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

விண்ணப்பம்

விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் மற்றும் இணையதளம்

யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு 2027-க்குத் தயாராகும் மற்றும் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் பயிற்சி மையங்களில் சேர விரும்பும் ஆர்வமுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.skilldevelopment.tn.gov.in என்ற முகவரிக்குச் சென்று ஆன்லைனில் மட்டுமே தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விரிவான வழிகாட்டுதல்களைப் படித்துப் பார்த்த பின்னரே விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யுமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

ADVERTISEMENT

அட்டவணை

முக்கிய தேதிகள் மற்றும் கால அட்டவணை

இத்திட்டத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த ஜூலை 18 ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது.

தகுதியான தேர்வர்கள் வரும் ஆகஸ்ட் 03 ஆம் தேதிக்குள் தங்களது ஆன்லைன் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து முடிக்க வேண்டும்.

இதற்கான தேர்வு நுழைவுச் சீட்டு ஆகஸ்ட் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, காலக்கெடு முடிவதற்குள் ஆர்வமுள்ள மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி விரைவாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ADVERTISEMENT

தேர்வு

தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம்

இந்த ஊக்கத்தொகை மற்றும் இலவச பயிற்சி மைய சேர்க்கைக்கான மதிப்பீட்டுத் தேர்வானது வரும் செப்டம்பர் 6 ஆம் தேதியன்று தமிழகம் முழுவதும் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

இத்தேர்வானது அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை இரண்டு மணி நேரம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எழுத்துத் தேர்வில் தகுதி பெறும் மாணவர்களின் விவரங்கள் பின்னர் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும்.

ADVERTISEMENT