38 ஆண்டு சாதனை முறியடிப்பு: உலகின் இளம் சர்வதேச மாஸ்டரானார் 11 வயது போதனா சிவானந்தன்
செய்தி முன்னோட்டம்
இங்கிலாந்தின் வடக்கு லண்டனில் உள்ள ஹாரோ பகுதியைச் சேர்ந்த இந்திய வம்சாவளி சிறுமியான போதானா சிவானந்தன், தனது 11-வது வயதிலேயே செஸ் விளையாட்டின் சர்வதேச மாஸ்டர் பட்டத்தை வென்று புதிய உலக சாதனை படைத்துள்ளார். புகழ்பெற்ற பெண் செஸ் வீராங்கனையான ஹங்கேரியின் யூடிட் போல்கர் கடந்த 38 ஆண்டுகளுக்கு முன்பு படைத்திருந்த வரலாற்று சாதனையை இதன் மூலம் போதானா முறியடித்துள்ளார். ஐரோப்பிய மகளிர் செஸ் கிளப் கோப்பை 2026 தொடரில் பங்கேற்ற அவர், இறுதிச் சுற்றில் பெற்ற அபார வெற்றியின் மூலம் செஸ் வரலாற்றிலேயே மிக இளம் வயதில் சர்வதேச மாஸ்டர் பட்டம் வென்ற பெண் வீராங்கனை என்ற உலகப் பெருமையை அதிகாரப்பூர்வமாகத் தன்வசப்படுத்தியுள்ளார்.
சர்வதேச மாஸ்டர் பட்டம்
யூரோப்பியன் கிளப் கோப்பையில் அபார ஆட்டம்
ஷி பிளேஸ் டு வின் லயனசஸ் அணிக்காக முதல் போர்டில் களமிறங்கிய போதானா சிவானந்தன், மொத்தம் நடைபெற்ற 7 சுற்றுகளில் 5.5 புள்ளிகளைக் குவித்து அசத்தினார்.
முதல் சுற்றில் ரஷ்யாவின் கிராண்ட் மாஸ்டர் அலெக்ஸாண்ட்ரா கோரியாச்கினாவுக்கு எதிராக டிரா செய்யும் நிலைக்கு நெருங்கி வந்த அவர், மூன்றாவது சுற்றில் பெலாரஸ் நாட்டின் சர்வதேச மாஸ்டர் ஓல்கா படேல்காவை வீழ்த்தி தனது சர்வதேச ரேட்டிங்கை 2399.4 புள்ளிகளாக உயர்த்தினார்.
தொடர்ந்து அடுத்த சுற்றில் ஜார்ஜியாவின் கிராண்ட் மாஸ்டர் நினோ பாட்சியஸ்விலியுடன் போட்டியை டிரா செய்தார்.
இறுதிப் போட்டியில் ஸ்வீடனின் வுமன் இன்டர்நேஷனல் மாஸ்டர் விக்டோரியா ஜோஹன்சனை வெறும் 32 நகர்வுகளிலேயே வீழ்த்தி, சர்வதேச மாஸ்டர் பட்டத்தை உறுதி செய்தார்.
கிராண்ட் மாஸ்டர்
டாப் 10 இளம் மாஸ்டர்கள் வரிசையில் சாதனை
இந்தப் புதிய மைல்கல்லின் மூலம், ஒட்டுமொத்த செஸ் வரலாற்றிலேயே மிகக் குறைந்த வயதில் சர்வதேச மாஸ்டர் பட்டம் வென்ற உலகின் டாப் 10 வீரர்களின் பட்டியலிலும் போதானா இடம்பிடித்துள்ளார்.
இந்தியாவின் முன்னணி கிராண்ட் மாஸ்டர்களான ஆர். பிரக்ஞானந்தா, டி. குகேஷ், உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசட்டோரோவ், அர்ஜென்டினாவின் ஃபாஸ்டினோ ஓரோ, துருக்கியின் யாகிஸ் கான் எர்டோக்மஸ் மற்றும் ரஷ்யாவின் ரோமன் ஷோக்ட்ஷீவ் ஆகியோருடன் தற்போது போதானா சிவானந்தனின் பெயரும் இணைந்துள்ளது.
இளம் வயதிலேயே உலகத் தரம் வாய்ந்த கிராண்ட் மாஸ்டர்களுக்கு எதிராக அவர் காட்டிய முதிர்ச்சியான ஆட்டம் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.