வாட்ஸ்அப் பயனர்களுக்கு அதிர்ச்சி! இனி இந்த போன்களில் லாக் இன் செய்ய முடியாது; மெட்டாவின் அதிரடி முடிவு
செய்தி முன்னோட்டம்
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான பிரபல குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ்அப், பயனர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் ஒரு புதிய பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தி வருகிறது. இதன்படி, பழைய ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் இயங்கும் ஸ்மார்ட்போன்களில் பயனர்கள் தங்களது வாட்ஸ்அப் கணக்கில் லாக் இன் செய்ய முடியாது. லாக் இன் செய்ய முயலும் போது திரை எச்சரிக்கை விடுக்கப்பட்டுப் பயனர்கள் உள் நுழைவது தடுக்கப்படும்.
அப்டேட் கட்டாயம்
சாப்ட்வேர் அப்டேட் செய்வது கட்டாயம்
இந்த புதிய கட்டுப்பாட்டின்படி, பழைய இயங்குதளம் கொண்ட போன்களில் லாக் இன் செய்ய முயலும் போது, வாட்ஸ்அப் ஒரு எச்சரிக்கை செய்தியைக் காட்டும்.
பயனர்கள் தங்களது போன் செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று லேட்டஸ்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அப்டேட்டைப் பதிவிறக்கம் செய்யுமாறு அதில் அறிவுறுத்தப்படும்.
இந்த அப்டேட்டை செய்து முடித்த பிறகே பயனர்களால் மீண்டும் வாட்ஸ்அப் கணக்கிற்குள் லாக் இன் செய்ய முடியும்.
இந்த நிபந்தனையைத் தவிர்க்கவோ அல்லது ஸ்கிப் செய்யவோ முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
காரணம்
மெட்டா நிறுவனத்தின் இந்த அதிரடி முடிவுக்குக் காரணம் என்ன?
பழைய ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் உள்ள பாதுகாப்பு சீர்கேடுகளைப் பயன்படுத்தி ஹேக்கர்கள் போன்களுக்குள் ஊடுருவவும், தனிநபர் தகவல்களைத் திருடவும் அதிக வாய்ப்புள்ளது.
வாட்ஸ்அப் நிறுவனம் எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன் பாதுகாப்பை வழங்கினாலும், இயங்குதளமே பாதுகாப்பற்றதாக இருக்கும் போது கணக்கைப் பாதுகாக்க முடியாது.
இதன் காரணமாகவே வாட்ஸ்அப் இந்தத் தடையை விதித்துள்ளது.
சர்வர் வழியிலான இந்த அப்டேட் தற்போது குறிப்பிட்ட பயனர்களுக்குக் படிப்படியாகக் கொண்டுவரப்பட்டு வருகிறது.
கூடுதல் அம்சங்கள்
பாதிக்கப்படும் பழைய போன்கள் மற்றும் கூடுதல் அம்சங்கள்
எந்தெந்த பழைய ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பதிப்புகளுக்கு இந்த லாக் இன் தடை பொருந்தும் என்ற துல்லியமான விவரங்களை வாட்ஸ்அப் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.
மேலும் புதிய சாப்ட்வேர் அப்டேட் பெறத் தகுதியில்லாத மிகப்பழைய போன்களின் நிலை என்ன என்பதும் கேள்விக்குறியாகியுள்ளது.
இதுமட்டுமின்றி போலி வாட்ஸ்அப் வெப் கிளையண்டுகளுக்கான எச்சரிக்கை, ஸ்கேம் அலர்ட் மற்றும் லாக் செய்யப்பட்ட சாட்கள் போன்ற பல்வேறு புதிய பாதுகாப்பு அம்சங்களையும் வாட்ஸ்அப் உருவாக்கி வருகிறது.