பயனர்களின் குறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இன்ஸ்டாகிராம்! அல்காரிதத்தை மாற்றும் புதிய வசதிகள்
செய்தி முன்னோட்டம்
இன்ஸ்டாகிராம் செயலியில் பயனர்களுக்குப் பிடிக்காத பல தேவையற்ற கன்டென்ட்களை அதன் அல்காரிதம் தொடர்ந்து பரிந்துரைப்பதாக நீண்ட நாட்களாக புகார்கள் இருந்து வந்தன. இதற்குத் தீர்வாக, பயனர்கள் தங்களது ஃபீடு (Feed) மற்றும் ரீல்ஸ் (Reels) பக்கங்களில் தங்களுக்கு வரும் பரிந்துரைகளைத் தாங்களே நேரடியாகக் கட்டுப்படுத்தும் வகையிலான புதிய வசதிகளை இன்ஸ்டாகிராம் தற்பொழுது சோதித்து வருகிறது. இது குறித்த முன்னோட்ட விவரங்களை இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் தலைவர் ஆடம் மொசேரி தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
யுவர் அல்காரிதம்
'யுவர் அல்காரிதம்' (Your Algorithm) வசதி எளிமையாக்கப்படுகிறது
கடந்த 2025 ஆம் ஆண்டில் இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்திய 'யுவர் அல்காரிதம்' என்ற அம்சம், பயனர்கள் தங்களுக்கு வர வேண்டிய பரிந்துரைகளைத் தீர்மானிக்க உதவுகிறது. தற்போதைய புதிய மாற்றத்தின்படி, பயனர்கள் செட்டிங்ஸ் (Settings) பக்கத்திற்குள் சென்று தேட வேண்டிய அவசியமில்லாமல், நேரடியாகத் தங்களது ஹோம் ஃபீடை கீழே இழுப்பதன் (Pull down) மூலமாகவே இந்த 'யுவர் அல்காரிதம்' மெனுவைத் திறந்து கொள்ள முடியும். அதேபோல் ஒரு ரீல்ஸ் வீடியோவைப் பார்க்கும்போது, அதனை மேலே ஸ்வைப் செய்வதன் மூலமும் தங்களுக்கு அடுத்ததாக எந்த மாதிரியான வீடியோக்கள் வர வேண்டும் என்பதைப் பயனர்கள் உடனுக்குடன் மாற்றியமைக்கலாம்.
நீண்ட நாள் கோரிக்கை
பயனர்களின் நீண்ட நாள் கோரிக்கைக்குக் கிடைத்த பதில்
இன்ஸ்டாகிராம் பயனர்கள் பலரும் தங்களது ஹோம் ஃபீடில் தாங்கள் பின்தொடரும் (Follow) நண்பர்கள் மற்றும் கன்டென்ட் கிரியேட்டர்களின் பதிவுகளை விட, அல்காரிதம் பரிந்துரைக்கும் தேவையற்ற பதிவுகளே அதிகமாக ஆக்கிரமிப்பதாகக் குமுறி வந்தனர். பயனர்களின் இந்த நியாயமான கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, ஹோம் ஸ்கிரீனிலிருந்தே பரிந்துரைகளைத் தங்களுக்கு ஏற்றபடி மாற்றியமைக்கும் (Tune in real time) இந்த எளிய வழிகளை இன்ஸ்டாகிராம் தற்பொழுது உருவாக்கி வருகிறது. இந்த வசதிகளில் சில தற்பொழுது சோதனையில் உள்ளதாகவும், சில விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்றும் ஆடம் மொசேரி தெரிவித்துள்ளார்.
புதிய வசதி
கேருசல் (Carousel) பதிவுகளுக்கும் புதிய வசதி அறிமுகம்
பயனர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கும் ஒரு பகுதியாக, இன்ஸ்டாகிராம் அண்மையில் 'கேருசல்' (Carousel - பல புகைப்படங்களை ஒன்றாகப் பதிவிடுவது) பதிவுகளுக்கும் ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு கேருசல் பதிவுகளில் உள்ள அனைத்துப் படங்களுக்கும் சேர்த்து ஒரே ஒரு கேப்ஷன் (Caption) மட்டுமே எழுத முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், தற்போதைய புதிய அப்டேட் மூலமாகப் பயனர்கள் தாங்கள் பதிவிடும் கேருசலில் உள்ள ஒவ்வொரு தனித்தனிப் புகைப்படத்திற்கும் தனித்தனியான கேப்ஷன்களை எழுதிக் கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.