இரவு நேர சருமப் பராமரிப்பு: இந்த 5 தவறுகளைச் செய்தால் சருமத்திற்குப் பாதிப்பு!
செய்தி முன்னோட்டம்
இரவு நேரத்தில் சருமத்தைப் பராமரிப்பது (Nighttime skincare) ரொம்பவே முக்கியம். ஏனென்றால், இந்த நேரத்தில்தான் சருமம் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளவும், சேதங்களைச் சரி செய்யவும் செய்யும். ஆனால், நிறைய பேர் இரவில் ஸ்கின்கேர் செய்தாலும், தங்களை அறியாமலேயே சில தவறுகளைச் செய்துவிடுகிறார்கள். இது சருமத்திற்குப் பெரிய பாதிப்பைக் கொடுக்கலாம். இரவு நேர ஸ்கின்கேர் செய்யும்போது செய்யக்கூடாத அந்தத் தவறுகள் என்னென்ன என்று இப்பொழுது பார்ப்போம்.
#1
மேக்கப்பை சுத்தம் செய்ய மறவாதீர்கள்
இரவு தூங்குவதற்கு முன்பாக முகத்தில் இருக்கும் மேக்கப்பை தூய்மை செய்வது மிக அவசியமாகும். இது இரவு நேரத்தில் நமது சருமத்திற்கு நல்ல ஓய்வைத் தந்து, அது தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ள வழிவகுக்கும். ஒருவேளை மேக்கப்பை நீக்காமல் அப்படியே தூங்கினால், அது சருமத் துவாரங்களை அடைத்து, கிருமிகள் பெருகுவதற்குக் காரணியாக மாறிவிடும். இதன் விளைவாக முகத்தில் பருக்கள் தோன்றுதல், சருமம் சிவந்து போதல் மற்றும் கடுமையான வறட்சி போன்ற தேவையற்ற பாதிப்புகள் ஏற்படும்.
#2
இரவில் ஸ்க்ரப் செய்வதைத் தவிர்த்திடுங்கள்!
இரவு நேரத்தில் சருமத்தை ஸ்க்ரப் செய்வதைக் கண்டிப்பாய் தவிர்க்க வேண்டும். இது சருமத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்; குறிப்பாக, சென்சிடிவ் சருமம் (Sensitive skin) உள்ளவர்களுக்கு இது மிகுந்த கெடுதலைத் தரும். பகல் முழுவதும் முகத்தில் சேர்ந்த அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை நீக்குவதற்குச் ஸ்க்ரப்க்குப் பதிலாகக் க்ளென்சரைப் பயன்படுத்துங்கள். முதலில் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவித் தூய்மைப்படுத்திய பின், ஃபேஸ் க்ரீம் தடவ வேண்டும். இது சருமத்திற்குத் தேவையான ஈரப்பதத்தையும் ஊட்டச்சத்தையும் தந்து ஆரோக்கியமாக வைக்கும்.
#3
கண் சுற்றியுள்ள சருமத்தைப் பராமரிக்க மறவாதீர்கள்!
கண்களைச் சுற்றியுள்ள சருமப் பகுதி மிகவும் மென்மையானதாகும்; ஆனால், பலரும் இரவு நேரப் பராமரிப்பில் இதற்குக் கூடுதல் கவனம் செலுத்துவதில்லை. எனவே, தூங்குவதற்கு முன்பாகக் கண்களைச் சுற்றி வயோதிகத் தோற்றத்தைத் தடுக்கும் கிரீம்கள் அல்லது வைட்டமின் சத்துக்கள் நிறைந்த கிரீம்களைப் பயன்படுத்துவது நல்லது. இத்தகைய கிரீம்கள் கண் சுற்றியுள்ள பகுதிக்குத் தேவையான ஈரப்பதத்தையும் ஊட்டச்சத்தையும் அளிப்பதால், அங்குள்ள சருமம் எப்போதும் மென்மையாகவும் ஆரோக்கியமாகவும் பராமரிக்கப்படும்.
#4
உதடுகளுக்கு ஈரப்பதம் அளிப்பது அவசியம்
இரவு தூங்குவதற்கு முன்பாக முகத்தைப் போலவே உதடுகளுக்கும் போதிய ஈரப்பதம் அளிப்பது அவசியமாகும். இது உதடுகள் வறண்டு போவதையும், வெடிப்புகள் ஏற்படுவதையும் தடுக்க உதவும். சிறிது சர்க்கரையுடன் தேனைக் கலந்து உதடுகளில் மென்மையாகத் தேய்த்து தூய்மைப்படுத்துங்கள். அதன் பிறகு, பெட்ரோலியம் ஜெல்லி, தேங்காய் எண்ணெய் அல்லது உங்களுக்குப் பிடித்தமான லிப் பாம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை உதட்டில் தடவலாம். இது உங்கள் உதடுகளை எப்போதும் மென்மையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்.
#5
அசுத்தமான படுக்கையில் தூங்குவதைத் தவிர்த்திடுங்கள்
இரவு நேரச் சருமப் பராமரிப்பை முடித்த பிறகு, சுத்தமான படுக்கையில் தூங்குவது மிக அவசியமாகும். அசுத்தமான படுக்கையில் உறங்குவது முகத்தில் தேவையற்ற பருக்கள் தோன்றுவதற்குக் காரணமாகிவிடும். எனவே, உங்கள் படுக்கை விரிப்பை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பதோடு, வாரத்திற்கு ஒரு முறையாவது அதனை மாற்றிட வேண்டும். அதேபோல், தலையணை உறைகளையும் வாரம் ஒருமுறை மாற்றி, நன்றாகத் துவைத்து உபயோகிப்பது உங்கள் சருமத்திற்குப் புத்துணர்ச்சியையும் நல்ல ஓய்வையும் கொடுக்கும்.