நாட்டு நாய் வளர்ப்புக்காக தேசிய விருது பெற்ற பொறியாளர்-குவியும் பாராட்டுக்கள்
உசிலம்பட்டி அருகே புதூர் மலையின் அடிவாரத்தில் பொத்தாம்பட்டி என்னும் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ், இவர் சென்னையில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். மறுபக்கம், தனது சொந்த கிராமத்தில் நாய் பண்ணை ஒன்றினை அமைத்து அதில் 100க்கும் மேற்பட்ட நாட்டு நாய்களை வளர்த்து வருகிறார். இவரது பண்ணையில் சிப்பிப்பாறை, கன்னி, கோம்பை, மண்டை உள்ளிட்ட பல்வேறு இனங்களில் நாட்டு நாய்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாய்களுக்கும் தனித்தனி அறைகள் அமைத்து அவர் நாய்களை வளர்த்து வருகிறார். 20 சென்ட்டில் நாய்களை வளர்த்து வந்த சதீஷுக்கு இட பற்றாக்குறை இருந்ததால், தங்களது விவசாய நிலத்தில் சதீஷின் நாய் பண்ணைக்காக ஒரு ஏக்கரை ஒதுக்கி அவரது குடும்பத்தினர் கொடுத்துள்ளார்களாம்.
2022ம் ஆண்டிற்கான 'நாட்டு இன காப்பாளர்' என்னும் தேசிய விருது பெற்ற பொறியாளர் சதீஷ்
இந்நிலையில், சிப்பிப்பாறை என்னும் நாய் இனத்தை பாதுகாத்து வளர்ந்து வரும் சதீஷிற்கு இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தின் மூலம் 2022ம் ஆண்டிற்கான நாட்டு இன காப்பாளர் என்ற தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து சதீஷ் கூறியுள்ளதாவது, "எங்களிடம் உள்ள அனைத்து நாய்களுக்கும் யுனைடெட் கென்னட் கிளப் ஆப் இந்தியா மற்றும் கென்னட் கிளப் ஆப் இந்தியா ஆகியோரால் சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாய்களின் பெற்றோரின் வம்சாவளி மற்றும் பிறந்த தேதி போன்ற விவரங்கள் இடம்பெற்றிருக்கும். நாட்டு நாய் இனத்தின் வளர்ச்சிக்காகவே நாய் பண்ணை நடத்துவதோடு, நாய்களை ரூ.6 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்பனை செய்து வருகிறோம்" என்று தெரிவித்துள்ளார். இவருக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.