பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு: 2,300 மாநகர பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள்
நிர்பயா திட்டத்தின் அடிப்படையில் பொதுபோக்குவரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்புகருதி மத்தியஅரசின் நிதியுதவியுடன், தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், சென்னையில் முதல்கட்டமாக 500 பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்திய பேருந்துகளின் சோதனை ஓட்டத்தை தமிழக முதல்வர் கடந்தாண்டு துவக்கி வைத்தார். இதனையடுத்து இரண்டாம் கட்டமாக, தற்போது 72.25கோடி செலவில் 2500பேருந்துகள் மற்றும் பணிமனைகள், பேருந்து நிலையங்கள் என மொத்தம் 66 இடங்களில் கேமராக்கள் பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் முதல் 500 பேரூந்துகளோடு சேர்த்து மொத்தம் 2,330பேருந்துகள் மற்றும் 63இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நிறைவு பெற்றுள்ளது. ஒவ்வொரு பேருந்திலும் வீடியோ ரெக்கார்டர், 3 கண்காணிப்பு கேமராக்கள், 4 அவசரகால பொத்தான்கள், ஒரு ஒலிபெருக்கி ஆகியன பொருத்தப்பட்டுள்ளது.
அச்சுறுத்தல் ஏற்பட்டால் அவசரகால பொத்தானை அழுத்த வேண்டும் - ஒரு நிமிட காணொளி காட்சி கட்டுப்பாட்டு அறைக்கு செல்லும்
இவ்வகை பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள், குழந்தைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், பேருந்தில் பொருத்தப்பட்டுள்ள அவசரகால பொத்தானை அழுத்தினால் ஒலிபெருக்கியில் ஒலி எழுப்பப்படும். இது ஓட்டுநர், நடத்துனர் மற்றும் உடன் பயணிப்போர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். மேலும், ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திற்கும் தானாகவே ஒரு நிமிட காணொளி காட்சி உடனடியாக எடுத்து அனுப்பப்படும். இந்த பதிவு ஆய்வு செய்யப்பட்டு, அசாம்பாவிதம் உறுதி செய்யப்படும் பட்சத்தில், சென்னை பெருநகர காவல் கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் தெரிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கேமரா பொருத்தப்பட்ட பேருந்துகளையும், ரூ.4.72 கோடியில் அமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.