விவசாயிகள் போராட்டத்திற்குப் பணிந்தது அரசு! செய்யாறு மேல்மா கிராமத்தில் சிப்காட் நில எடுப்பு அரசாணை ரத்து
செய்தி முன்னோட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் மேல்மா கிராமத்தில் சிப்காட் தொழிற்பூங்கா விரிவாக்கத்திற்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்த வெளியிடப்பட்ட தமிழ்நாடு தொழிலியல் நோக்கங்களுக்கான நில எடுப்பு அறிவிக்கையைத் தவெக அரசு அதிகாரப்பூர்வமாகத் திரும்பப் பெற்றுள்ளது. அப்பகுதி விவசாயிகள் மற்றும் சூழலியல் அமைப்புகளின் தொடர் போராட்டங்கள் மற்றும் எதிர்ப்புகள் காரணமாகத் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்கள் இங்கே:-
திட்டமும் எதிர்ப்பும்
மேல்மா சிப்காட் திட்டமும் எழுந்த கொந்தளிப்பும்
தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை பெருக்கும் நோக்கில் செய்யாறு அருகே சிப்காட் தொழிற்பேட்டை நிலை-3 அமைப்பதற்காக மேல்மா உட்பட 11 கிராமங்களில் சுமார் 3,000 ஏக்கர் விவசாய நிலங்களைக் கையகப்படுத்த அரசு முயன்றது.
இதன் கீழ் மேல்மா கிராமத்தில் மட்டும் 22.16.00 ஹெக்டேர் புன்செய் நிலங்களை எடுப்பதற்கான நோட்டீஸ் சமீபத்தில் வெளியானது.
இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அஞ்சிய கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் வீதியில் இறங்கித் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
பூவுலகின் நண்பர்கள்
பூவுலகின் நண்பர்கள் சுட்டிக்காட்டிய தவெகவின் முந்தைய நிலைப்பாடு
இந்த நில எடுப்பு அறிவிப்பிற்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
2025 ஜூலை மாதம் நடைபெற்ற தவெக செயற்குழு கூட்டத்தில் மேல்மா சிப்காட் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையும், விவசாயிகள் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தபோது தவெக எதிர்த்ததையும் சுட்டிக்காட்டினர்.
மேலும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா நேரில் ஆய்வு வாக்குறுதி அளித்த நிலையில், தற்போது நில எடுப்பு நோட்டீஸ் வெளியிட்டது ஏன் என கேள்வி எழுப்பியிருந்தனர்.
விவசாயிகள் மகிழ்ச்சி
அரசாணை அதிகாரப்பூர்வமாக வாபஸ்
பொதுமக்களின் எதிர்ப்பு மற்றும் அமைப்புகளின் சுட்டிக்காட்டலைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசிதழ் எண் 369-ல் (நாள் 01.09.2026) வெளியிடப்பட்ட பிரிவு 3(1)-ன் கீழ் அறிவிக்கை எண் VI(1)/443*(d-6)*2026 முழுமையாக திரும்பப் பெறப்படுவதாக சிப்காட் மேலாண்மை இயக்குநர் அறிவித்துள்ளார்.
அரசின் இந்த அதிரடி பின்வாங்கலைத் தொடர்ந்து, மேல்மா மற்றும் அதனை சுற்றியுள்ள 11 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் மக்கள் நிம்மதியும் பெருமகிழ்ச்சியும் அடைந்துள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#BREAKING | மீண்டும் நிலைப்பாட்டில் மாற்றம்: மேல்மா கிராம சிப்காட் - நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்றது தமிழ்நாடு அரசு https://t.co/eXwLZrQSLp pic.twitter.com/09pm1oSARZ
— Sun News (@sunnewstamil) September 18, 2026