குடை எடுக்க மறந்துடாதீங்க! நாளை கோவை உட்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை; வானிலை மையம் அறிக்கை
செய்தி முன்னோட்டம்
வட தமிழகத்தின் உள் பகுதி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் நாளை (செப்டம்பர் 19) கோவை, மதுரை, நீலகிரி, வேலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டலத்தில் சுமார் 4.5 கி.மீ உயரத்தில் இந்த சுழற்சி நிலவுகிறது. அதேவேளையில் மராத்வாடாவிலிருந்து தென்கிழக்கு அரபிக்கடல் வரை சுமார் 5.8 கிமீ உயரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பாதையும் நீடிக்கிறது.
11 மாவட்டங்கள்
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள 11 மாவட்டங்கள்
இந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாளை (செப்.19) நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, தருமபுரி, ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், கள்ளக்குறிச்சி மற்றும் மதுரை ஆகிய 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
மிதமான மழை
மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ள இதர மாவட்டங்கள்
நாளை இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், சேலம், ஈரோடு, நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும் சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை
செப்.20, 21 தேதிகளுக்கான வானிலை மற்றும் சென்னை நிலவரம்
வரும் செப்டம்பர் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், திருச்சி, மதுரை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை தொடர வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒருசில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.