பிரசவத்திற்கு வந்த பெண் வயிற்றில் கைக்குட்டை தைத்த மருத்துவர் - விசாரணைக்கு உத்தரவு
உத்திரப்பிரதேசம், அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள பான்ஸ் கெரி என்னும் கிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பிரசவத்திற்காக நஸ்ரானா என்ற பெண் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது. அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் மத்லூப், அஜாக்கிரதையாக கைக்குட்டையை நஸ்ரானா வயிற்றின் உள்ளே வைத்து தையல் போட்டுள்ளார். இதனை தொடர்ந்து, அப்பெண்ணிற்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவரிடம் அவர்கள் கேட்டபொழுது, குளிர் காரணமாக கூட வயிற்றில் வலி ஏற்படக்கூடும் என்று கூறி, மருந்து கொடுத்துள்ளனர். தொடர்ந்து ஐந்து நாட்கள் மருத்துவமனையில் தங்கி நஸ்ரானா சிகிச்சை பெற்றுள்ளார்.
வயிற்றில் கைக்குட்டை இருந்தது ஸ்கேன் மூலம் கண்டுபிடிப்பு
ஐந்து நாட்களுக்கு பின்னர் வீட்டிற்கு சென்ற நஸ்ரானாவிற்கு வயிற்று வலி அதிகரித்து, வலியால் துடித்துள்ளார். இதனையடுத்து அவரது கணவர் ஷம்ஷேர் அலி, வேறு ஒரு தனியார் மருத்துவமனைக்கு மனைவி நஸ்ரானாவை அழைத்து சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்துள்ளார்கள். ஸ்கேனில் கைக்குட்டை ஒன்று அவரது வயிற்றில் இருப்பது தெரியவந்தது. பின்னர், நஸ்ரானாவிற்கு மீண்டும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு கைக்குட்டை வெளியே அகற்றப்பட்டுள்ளது. இது குறித்து ஷம்ஷேர் அலி, தலைமை மருத்துவ அலுவலர் ராஜீவ் சிங்காலிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ள ராஜீவ் சிங்கால், குற்றம் உறுதி செய்யப்படும் பட்சத்தில், மருத்துவர் மத்லூப் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.