டெல்லி அஞ்சலி சிங் இறப்பு - கொலை வழக்கு 302வது பிரிவை சேர்க்க கோரி போராட்டம்
டெல்லி கஞ்சவாலா நகரில் புத்தாண்டு அன்று அஞ்சலி(20) என்னும் இளம்பெண் விபத்தில் காரில் சிக்கி 12கிமீதூரம் இழுத்துசெல்லப்பட்டு பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் கார் ஓட்டி சென்ற 5பேரை கைதுசெய்து விசாரித்து வருகிறார்கள். முதலில் அஞ்சலி காரில் சிக்கியது தெரியாது என்று கூறிய இவர்கள், பின்னர் தெரிந்தே தான் காரை ஒட்டினோம் என்று கூறினார்கள். அதே போல், அஞ்சலியுடன் பயணித்ததாக கூறி, அவர் மதுபோதையில் வண்டி ஓட்டினார் என்று கூறிய நிதி மீது போதைபொருள் கடத்தல் வழக்கு பதிந்துள்ளது போலீசாருக்கு பின்னர் தெரியவந்துள்ளது. இதுபோன்று பல விவகாரங்கள் புதைந்துள்ள நிலையில், இவ்வழக்கில் இன்னமும் கொலை வழக்கிற்கான பிரிவு சேர்க்கப்படவில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது.
டெல்லி சுல்தான்பூரி காவல் நிலையத்திற்கு முன் போராட்டம் மேற்கொள்ளும் அஞ்சலியின் மாமா
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அஞ்சலி சிங் மாமாவும் மற்றும் சிலரும் சுல்தான்பூரி காவல்நிலையம் முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இது குறித்து அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், துணை காவல் ஆணையரிடம் தம்மை பேச வைப்பதாகவும், 302வது பிரிவை வழக்கில் சேர்ப்பது தனது கையில் இல்லை என்றும் காவல் அதிகாரி கூறுகிறார். குற்றவாளிகளே செய்த தவறை ஒப்புக்கொண்ட பிறகு, காவல்துறை பார்க்க வேண்டியது என்ன மீதியுள்ளது?' என்று அவர் கேள்வியெப்பியுள்ளார். அவருடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மற்றொருவர், "இதுவே அஞ்சலி அரசியல்வாதி மகளாகவோ, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் மகளாகவோ இருந்திருந்தால் போலீசாரின் நடவடிக்கை இவ்வளவு மெல்லவா இருந்திருக்கும்?" என்று கேள்வியெழுப்பியுள்ளார். இதனை தொடர்ந்து, "302வது பிரிவு சேர்க்கப்படும் வரை எங்கள் போராட்டம் நிறுத்தப்படாது" என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.