அமித்ஷா குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியதில் என்ன தவறு? - முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு சட்டசபையில் கடந்த 11ம் தேதி நடந்த விளையாட்டுத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய எஸ்.பி.வேலுமணி, ஐபிஎல் கிரிக்கெட் பாஸ்களை வாங்கித்தருமாறு கோரிக்கை வைத்தார். அதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின் உங்களது நெருங்கிய நண்பர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா தான் பிசிசிஐ தலைவராக உள்ளார். அவரிடம் பேசி எங்களுக்கும் ஐபிஎல் டிக்கெட்களை வாங்கி தாருங்கள் என்று வேடிக்கையாக பதிலளித்தார். இது இணையத்தில் வைரலானது. இதனை தொடர்ந்து இன்று(ஏப்ரல்.,13) நடந்த பேரவையில் பேசிய பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் 'மத்திய அமைச்சர் அமித்ஷாவின் பெயரை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறினார்.
மத்திய அமைச்சர் பெயர் என்ன தகாத வார்த்தையா ? - ஸ்டாலின்
இதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது, மத்திய அமைச்சரின் பெயரை கேலி செய்தோ, விமர்சனம் செய்தோ அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசவில்லை. திரு என்று குறிப்பிட்டு தான் பேசினார். அதில் என்ன தவறு உள்ளது. தவறு இருந்தால் நீக்க தயாராக உள்ளோம் என்று கூறினார். அதற்கு நயினார் நாகேந்திரன், 'அவர் பெயர் இருக்க வேண்டாம் என்று தான் சொல்கிறேன் என்று கூறினார். மீண்டும் அதற்கு பதிலளித்த ஸ்டாலின், மத்திய அமைச்சர் மற்றும் அவரது மகன் பெயர் என்ன தகாத வார்த்தையா? ஏன் அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்? என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.