2023ம் ஆண்டு பட்ஜெட் - எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்காததையடுத்து போராட்டம்
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி அமைக்கப்படும் என்று கடந்த 2015ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியானது. இதற்காக மதுரை தோப்பூரில் உடனே இடமும் தேர்வு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 2019ம் ஆண்டு பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டு நான்கு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், கட்டுமான பணிகளுக்கான நிதிகள் ஏதும் ஒதுக்கப்படாமல் தாமதம் நீட்டித்து வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசுக்கு 17 முறை அழுத்தம் கொடுக்கப்பட்டும் இதுவரை கட்டுமான பணிகள் துவங்கப்படவில்லை. சில நாட்களுக்கு முன்னதாக 'மதுரை எய்ம்ஸ் எங்கே' என்ற கேள்வியோடு மதுரை மார்க்சிஸ்ட் கட்சி சார்பாக பெரும் போராட்டம் நடத்தப்பட்டது.
கையில் ஒற்றை செங்கலை ஏந்தி தமிழக எம்.பி.க்கள் போராட்டம்
மேலும், மத்திய பட்ஜெட்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று சிபிஎம் சார்பாக அண்மையில் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் இன்று(பிப்.,1) 2023-24ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிதி ஒதுக்கீடு குறித்து எந்தவித அறிவிப்பும் இடம்பெறவில்லை. இதனையடுத்து நாடாளுமன்ற வளாகத்திலேயே சிபிஎம் கட்சிகளின் தமிழக எம்பி-க்கள், காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்டோர் ஒற்றை செங்கலை கையில் ஏந்தி, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் எம்பிக்கள் மாணிக்கம் தாகூர், கார்த்தி சிதம்பரம், விஜய் வசந்த், செல்வக்குமார், ஞானதிரவியம், சு.வெங்கடேசன், நவாஸ்கனி உள்ளிட்டோர் பங்கேற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.