மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் அமையும் - மத்திய அரசு உறுதி
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை நேற்று தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் நேற்று டெல்லியில் சந்தித்து பேசினார். அப்பொழுது தமிழக மருத்துவத்துறை சார்ந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்துள்ளார். அதன் பின், செய்தியாளர்களை சந்தித்த மா.சுப்ரமணியம் அவர்கள், நீட் தேர்வு விலக்கு கோரிக்கை, ஜனாதிபதி அலுவலகம் அமைத்தல், உள்துறை, ஆயுஷ் அமைச்சகங்கள் கேட்டிருக்கும் கூடுதல் விபரங்கள் குறித்து தமிழக அரசு ஏற்கனவே அனுப்பியதை எடுத்துரைத்ததாகவும், அதனை கேட்ட மத்திய அமைச்சர் 'முடிந்ததை பரிசீலிப்போம்' என்று கூறியதாகவும் தெரிவித்தார். மேலும், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதையடுத்து, கோவையிலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கோரிக்கை வைத்ததாகவும் தெரிவித்தார்.
மதுரையை தொடர்ந்து கோவையிலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கோரிக்கை
எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைக்க கட்டுமானப்பணிக்கு முதலில் ரூ.1400 கோடி நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.1900 கோடியாக திட்ட மதிப்பீடு உயர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ள மத்திய அமைச்சர், கட்டுமான பணிகள் துவங்க வரைப்படம் உள்ளிட்டவை தயாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். எனவே, விரைவில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் உறுதியளித்ததாகவும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவ கல்லூரி இல்லாத மாவட்டங்களான தென்காசி, பெரம்பலூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை போன்ற இடங்களில் மருத்துவ கல்லூரிகள் அமைக்க பரிசீலனை செய்வதாகவும் மத்திய அமைச்சர் கூறியுள்ளார். கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்த சாத்தியகூறுகள் ஆய்வு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.