Loading...
ஆஸ்கர் ரேஸில் வென்ற மராத்தி திரைப்படம்! துரந்தர், ஹனுமான் அன்ஷ் படங்களை பின்னுக்குத் தள்ளி கோந்தல் தேர்வு
ஆஸ்கர் 2027க்கு இந்தியா சார்பில் அதிகாரப்பூர்வமாக மராத்தி படம் கோந்தல் தேர்வு

ஆஸ்கர் ரேஸில் வென்ற மராத்தி திரைப்படம்! துரந்தர், ஹனுமான் அன்ஷ் படங்களை பின்னுக்குத் தள்ளி கோந்தல் தேர்வு

எழுதியவர் Sekar Chinnappan
Sep 18, 2026
05:30 pm

செய்தி முன்னோட்டம்

99-வது அகாடமி விருதுகளுக்கான (ஆஸ்கர் விருது 2027) சிறந்த சர்வதேசத் திரைப்படப் பிரிவில் இந்தியா சார்பில் அதிகாரப்பூர்வமாக மராத்தி திரைப்படமான கோந்தல் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 18) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இந்தியத் திரைப்படக் கூட்டமைப்பு இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. அறிமுக இயக்குநர் சந்தோஷ் தவக்கர் இயக்கியுள்ள இந்த திரைப்படம், இந்திய கலாச்சாரத்தை மிகத் தத்ரூபமாக சித்தரித்ததற்காக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

33 படங்களுடன் போட்டி

33 முன்னணி படங்களை வீழ்த்திப் பெற்ற வெற்றி

இந்த ஆண்டிற்கான ஆஸ்கர் பந்தயத்தில் பாலிவுட்டின் துரந்தர், பார்டர் 2, ஹனுமான் அன்ஷ் மற்றும் இக்கிஸ் உட்பட மொத்தம் 33 முன்னணித் திரைப்படங்கள் கடும் போட்டியில் இருந்தன.

இயக்குனர் பி.சேஷாத்ரி தலைமையிலான 14 உறுப்பினர்களைக் கொண்ட நடுவர் குழு இந்தத் தேர்வை நடத்தியது.

இதில் இக்கிஸ் மற்றும் அங் ஆகிய படங்கள் இறுதிச் சுற்றில் கடும் போட்டி அளித்த போதிலும், கோந்தல் திரைப்படத்தின் ஒளிப்பதிவு, இசை மற்றும் கதைக்களம் ஆகியவை நடுவர் குழுவை முழுமையாகக் கவர்ந்து முதலிடத்தைப் பிடித்தன.

கோந்தல் திரைப்படம்

கோந்தல் திரைப்படத்தின் கதைக்களம் மற்றும் முக்கிய சிறப்புகள்

மகாராஷ்டிராவின் பாரம்பரிய கோந்தல் கிராமப்புற சடங்கு மற்றும் நாட்டுப்புறக் கலையைப் பின்னணியாகக் கொண்டு ஒரு த்ரில்லர் திரைப்படமாக இது உருவாகியுள்ளது.

ஒரு திருமண விழாவில் தொடங்கும் கதை, பேராசை, பொறாமை மற்றும் கிராமப்புறப் பூசல்கள் நிறைந்த இருண்ட கதையாக மாறுகிறது.

கிஷோர் கதம், இஷிதா தேஷ்முக் மற்றும் யோகேஷ் சோஹோனி ஆகியோர் இதில் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர்.

கோவாவில் நடைபெற்ற இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் வெள்ளி மயில் விருதை இந்தப் படம் வென்றது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ஆஸ்கர் விவரம்

ஆஸ்கர் விருதின் அடுத்தகட்ட நகர்வுகள் மற்றும் விழா தேதி

திரையரங்குகளில் மிதமான வசூலையே ஈட்டியபோதிலும், சர்வதேச அளவில் இந்திய கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் சிறந்த படைப்பாக இத்திரைப்படம் பார்க்கப்படுகிறது.

முதற்கட்டமாக இந்தியாவின் அதிகாரப்பூர்வ தேர்வாக அனுப்பப்பட்டுள்ள கோந்தல், அடுத்ததாக ஆஸ்கர் அமைப்பின் வாக்களிப்பு முறை மூலம் 15 படங்களின் இறுதிப் பட்டியலுக்கு செல்ல வேண்டும்.

அதன் பின்னரே இறுதி 5 பரிந்துரை பட்டியலில் இடம் பிடிக்கும்.

99-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா வரும் 2027 மார்ச் 14 அன்று நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT