'சிக்கலான குடும்பத்தின் உறுப்பினர்கள்' படத்திற்கு ஆசியா பசிபிக் ஸ்கிரீன் அவார்டு விருது
செய்தி முன்னோட்டம்
தமிழ் திரையுலகிற்கு சர்வதேச அளவில் பெருமை சேர்க்கும் விதமாக, அறிமுக இயக்குநர் இரா.கவுதம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சிக்கலான குடும்பத்தின் உறுப்பினர்கள்' திரைப்படம் ஆசியாவின் ஆஸ்கார் விருது என்று அழைக்கப்படும் உயரிய 'ஆசியா பசிபிக் ஸ்கிரீன் அவார்டு' (Asia Pacific Screen Awards) விருதை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இப்படத்தை இயக்கியதன் மூலம் சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருதை இரா.கவுதம் தட்டிச் சென்றுள்ளார். வரும் அக்டோபர் 30 அன்று நடைபெறவுள்ள பிரம்மாண்ட விழாவில் அவர் இவ்விருதைப் பெற்றுக்கொள்ளவுள்ளார்.
கதைக்களம்
சர்வதேச திரைப்பட விழாக்களில் குவிந்த பாராட்டுகள்
சென்னை செங்குன்றம் பகுதியின் எளிய விளிம்புநிலை மக்களின் வாழ்வியல், சண்டைச் சச்சரவுகள் மற்றும் மது பழக்கம் சூழ்ந்த சூழலை எவ்வித சினிமாத்தனமுமின்றி எதார்த்தமாகப் பதிவு செய்துள்ளது இத்திரைப்படம்.
கூத்துப்பட்டறை அஜித்குமார், யுவ உள்ளிட்டோர் நடித்த இப்படத்திற்குச் சித்தார்த் கதிர் ஒளிப்பதிவு செய்ய, 'லேப்ரிந்த் நேரடிவ்ஸ்' தயாரித்துள்ளது.
முன்னதாகப் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு விமர்சகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம், மெல்போர்ன் திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது.
தொடர்ந்து, இமாச்சலப் பிரதேசத்தின் தர்மசாலாவில் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள சர்வதேச திரைப்பட விழாவிலும் அதிகாரப்பூர்வமாகப் பங்கேற்கத் தேர்வாகியுள்ளது.
சர்வதேச விருது
விரைவில் திரையரங்குகளில் வெளியீடு
சர்வதேச விருது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள இயக்குநர் இரா.கவுதம், "இந்த சர்வதேச அங்கீகாரம் ஒட்டுமொத்தப் படக்குழுவிற்கும் மிகப்பெரிய உத்வேகத்தையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது.
இன்னும் சில முன்னணி சர்வதேச திரைப்பட விழாக்களில் படத்தை அனுப்பித் திரையிட்ட பிறகு, தமிழ்நாட்டில் திரையரங்குகளில் அதிகாரப்பூர்வமாக வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.