LOADING...
சிக்ஸர் அடித்து சதம், ஆட்டநாயகன் விருது; ஒரே போட்டியில் 4 இமாலய சாதனைகளைத் தகர்த்த ஷ்ரேயாஸ் ஐயர்
ஷ்ரேயாஸ் ஐயர்

சிக்ஸர் அடித்து சதம், ஆட்டநாயகன் விருது; ஒரே போட்டியில் 4 இமாலய சாதனைகளைத் தகர்த்த ஷ்ரேயாஸ் ஐயர்

எழுதியவர் Sekar Chinnappan
May 24, 2026
06:11 am

செய்தி முன்னோட்டம்

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் டி20 கிரிக்கெட்டில் தனது 4வது சதத்தைப் பதிவு செய்துள்ளார். 197 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கிப் பஞ்சாப் அணி பயணித்த போது, ஆட்டத்தின் இறுதிப் பந்தில் சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெற வைத்ததுடன் தனது கன்னி ஐபிஎல் சதத்தையும் அவர் பூர்த்தி செய்தார். பஞ்சாப் அணியை இக்கட்டான சூழலில் இருந்து மீட்டு, அசாத்திய வெற்றியைத் தேடித்தந்த கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயருக்கு இப்போட்டியின் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த அதிரடி இன்னிங்ஸின் மூலம் ஷ்ரேயாஸ் ஐயர் படைத்துள்ள 4 முக்கிய சாதனைகளின் தொகுப்பு இதோ:-

#1

டி20 கிரிக்கெட்டில் 7,000 ரன்கள் மைல்கல்

இப்போட்டியில் தனது 25வது ரன்னை எடுத்த போது, ஷ்ரேயாஸ் ஐயர் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 7,000 ரன்கள் (தற்போது 7,076 ரன்கள்) என்ற மைல்கல்லை எட்டினார். தனது 254வது டி20 போட்டியில் (247 இன்னிங்ஸ்) இந்த சாதனையை அவர் படைத்துள்ளார். டி20 போட்டிகளில் இவரின் சராசரி 35.02 மற்றும் ஸ்டிரைக் ரேட் 138.47 ஆகும். ஒட்டுமொத்த டி20 போட்டிகளில் 4 சதங்கள் மற்றும் 48 அரைசதங்கள் உட்பட 52 முறை 50க்கும் மேற்பட்ட ரன்களை அவர் குவித்துள்ளார். இதில் இந்தியாவின் சார்பாக ஆடிய 51 சர்வதேச டி20 போட்டிகளில் அடித்த 1,104 ரன்களும் (8 அரைசதங்கள்) அடங்கும்.

#2

முதல் ஐபிஎல் சதம்

ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளை வழிநடத்தியுள்ள 31 வயதான ஷ்ரேயாஸ் ஐயரின் ஒட்டுமொத்த ஐபிஎல் வரலாற்றில் இதுவே முதல் சதமாகும். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி சார்பாக சதம் அடித்த 16வது பேட்ஸ்மேன் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். லக்னோ அணிக்கு எதிராக சதம் அடிக்கும் 3வது பேட்ஸ்மேன் இவராவார். மேலும் கே.எல்.ராகுல் (132*), ஆடம் கில்கிறிஸ்ட் (106) ஆகியோருக்குப் பிறகு ஐபிஎல் போட்டியில் சதம் அடித்த 3வது பஞ்சாப் கேப்டன் என்ற பெருமையையும் ஐயர் பெற்றுள்ளார். தற்போது 147 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள ஷ்ரேயாஸ் ஐயர் 35.83 சராசரியுடன் 4,229 ரன்கள் குவித்துள்ளார்.

Advertisement

#3

சேஸிங்கில் சதம் அடித்த 4வது ஐபிஎல் கேப்டன்

ஐபிஎல் வரலாற்றில் இலக்கை நோக்கிப் பின் தொடரும் போது (Run-chase) சதம் அடித்த 4வது கேப்டன் என்ற அரிய சாதனையை ஷ்ரேயாஸ் ஐயர் நிகழ்த்தியுள்ளார். ஐபிஎல் வரலாற்றில் சேஸிங்கின் போது சதம் அடித்த கேப்டன்கள் பட்டியல்: 119 ரன்கள் - வீரேந்தர் சேவாக் (டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிராக, 2011) 108 ரன்கள் - விராட் கோலி (ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக, 2016) 119 ரன்கள் - சஞ்சு சாம்சன் (பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக, 2021) 101 ரன்கள் - ஷ்ரேயாஸ் ஐயர் (லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக, 2026)

Advertisement

#4

கேப்டனாக 3,000 ஐபிஎல் ரன்கள்

இப்போட்டியின் மூலம் ஐபிஎல் தொடரில் ஒரு கேப்டனாக 3,000 ரன்கள் என்ற மைல்கல்லை ஷ்ரேயாஸ் ஐயர் கடந்துள்ளார். கேப்டனாக அவர் இதுவரை 38.7 சராசரியுடன் 3,096 ரன்கள் குவித்துள்ளார் (24 அரைசதங்கள் மற்றும் 1 சதம்). இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 3,000க்கும் அதிகமான ரன்களைக் குவித்த 6-வது கேப்டன் என்ற உயரத்தை எட்டி, விராட் கோலி (4,994), எம்எஸ் தோனி (4,753), ரோஹித் சர்மா (3,986), கௌதம் கம்பீர் (3,518) மற்றும் டேவிட் வார்னர் (3,356) ஆகிய ஜாம்பவான்களின் பட்டியலில் இணைந்துள்ளார்.

சாதனை

கூடுதல் சாதனை துளிகள்

இப்போட்டியில் 22 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து பஞ்சாப் அணி தவித்த போது ஜோடி சேர்ந்த பிரப்சிம்ரன் சிங் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் கூட்டணி 3வது விக்கெட்டிற்கு 140 ரன்கள் குவித்தது. இது லக்னோ அணிக்கு எதிராக எந்தவொரு அணியும் 3வது விக்கெட்டிற்கு எடுத்த மிக உயர்ந்த பார்ட்னர்ஷிப் (Highest 3rd-wicket stand) சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement