LOADING...
கத்தரி வெயிலுக்கு குட்-பை! வளிமண்டல சுழற்சியால் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்குக் கனமழை - லிஸ்டில் உங்க ஊர் இருக்கா?
தமிழகத்தின் 19 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை எச்சரிக்கை

கத்தரி வெயிலுக்கு குட்-பை! வளிமண்டல சுழற்சியால் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்குக் கனமழை - லிஸ்டில் உங்க ஊர் இருக்கா?

எழுதியவர் Sekar Chinnappan
May 24, 2026
07:47 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த சில வாரங்களாகத் தமிழகம் முழுவதும் கத்தரி வெயிலின் தாக்கத்தால் மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது வானிலை ஆய்வு மையம் குளிர்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. வானிலை மைய அறிக்கையின்படி, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவி வரும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும். வளிமண்டலத்தின் மேல் அடுக்கில் 3.1 கி.மீ முதல் 5.8 கி.மீ உயரம் வரை இந்தச் சுழற்சி நிலவுவதால், மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்று வீச வாய்ப்புள்ளது.

19 மாவட்டங்கள்

இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ள 19 மாவட்டங்கள்

தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள் மற்றும் உள் மாவட்டங்களில் உள்ள பின்வரும் 19 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது: கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், திண்டுக்கல், தேனி மற்றும் மதுரை. இந்த 19 மாவட்டங்களில் வசிப்பவர்கள் தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்ப்பது நல்லது. மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மே 26-30

மே 26 முதல் மே 30 வரை உள்ள வாராந்திர வானிலை நிலவரம்

மே 26 (செவ்வாய்க்கிழமை): நீலகிரி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களிலும், கோவை மற்றும் திருப்பூரின் மலைப்பகுதிகளிலும் கனமழை தொடர்ந்து நீடிக்க வாய்ப்புள்ளது. மே 27 மற்றும் மே 28: மழையின் வேகம் சற்று குறைந்து, தமிழகம் மற்றும் புதுவையின் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய லேசான மழை மட்டுமே பெய்யக்கூடும். மே 29 மற்றும் மே 30: மே மாத இறுதியில் மழையின் தீவிரம் ஒட்டுமொத்தமாகக் குறைந்து, மாநிலத்தின் பரவலான இடங்களில் லேசான சாரல் மழை மட்டுமே இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

சென்னை

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளின் அடுத்த 48 மணி நேர நிலவரம்

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காட்சியளிக்கும் என்பதால் வெயிலின் நேரடித் தாக்கம் குறையும். பகல் நேரத்தில் வழக்கமான புழுக்கம் இருந்தாலும், மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்து நகரை குளிர்விக்கப் போகிறது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலையாக 38° செல்சியஸ் வரையும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 29° செல்சியஸ் வரையும் பதிவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.

Advertisement