கல்லூரி மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.25,000 உதவித்தொகை; தமிழக அரசின் திட்டத்தில் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
செய்தி முன்னோட்டம்
தமிழக அரசு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ், பழங்குடியினர் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் கல்லூரி மாணவர்களுக்காக தமிழ்நாடு தொல்குடியினர் புத்தாய்வுத் திட்டத்தை (TNFTR) செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கு மாதம் ரூ.25,000 வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. 2024 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்திற்கான 2025 ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. இந்தத் திட்டத்தின் கீழ், இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டப்படிப்பு மற்றும் முனைவர் பட்ட மேலாய்வாளர் என ஏதேனும் ஒரு படிப்பை மேற்கொண்டு வரும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தில் மொத்தம் 70 பேர் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள்.
விபரங்கள்
உதவித்தொகை விவரங்கள்
முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்களுக்கு மாதம் ரூ.25,000 உதவித்தொகை என ஆய்வுக் காலமான மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இளங்கலை மற்றும் முதுகலை ஆய்வு மாணவர்களுக்கு மாதம் ரூ.10,000 உதவித்தொகை வழங்கப்படும். இதற்கு ஆய்வுக் காலமாக ஆறு மாதங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இந்தத் திட்டத்தில் தகுதி பெற, விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராகவும், அவரது குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்குள் இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பம்
விண்ணப்பிக்கும் முறை
இத்திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்புவோர் fellowship.tntwd.org.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பப் பதிவு நவம்பர் 12 ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் 12 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பழங்குடியினர் குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட விருப்பமுள்ள மாணவர்களுக்கு இந்தத் திட்டம் ஒரு சிறந்த நிதி உதவியாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.